வீடியோ காலில் பெண் ஒருவருக்கு ஆபாசமாக செய்கைகள் செய்த இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் போலீஸ் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் பென்சாம். இவர் மீது நாகர்கோவிலைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி (34) என்ற பெண் புகார் கூறியுள்ளார். வீடியோ கால் மூலமாக, தன்னிடம், பென்சாம் ஆபாசமாக பேசியதாக அந்த புகாரில் அவர் கூறியுள்ளார். 

இன்ஸ்பெக்டர் ஒருவர் பெண் ஒருவரிடம் ஆபாச செய்கை செய்த வீடியோ கடந்த ஜூலை மாதம் வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில், இன்ஸ்பெக்டர் ஆபாசமான செய்கைகள் ஈடுபட்டிருந்தார். யூனிபார்மில் இருக்கும்போதே ஆபாசமான செய்கையில் இன்ஸ்பெக்டர் பென்சாம் ஈடுபட்டிருந்தது காவல் துறை வட்டாரத்தில் சர்ச்சையை எழுப்பியிருந்தது.  

இந்த வாட்ஸ் அப் வீடியோ உரையாடல், கருங்கல் போலீஸ் நிலையத்தில் வைத்து நடந்ததாக காவல் துறை வட்டாரத்தில் உறுதிபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பென்சாம் கடந்த 14 ஆம் தேதி அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் பென்சாம் மீது, நாகர்கோவிலைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். கிருஷ்ணகுமாரியின் புகாரைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பென்சாம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் வன்கொடுமை சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.