சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. குடிநீர் வழங்கும் ஏரிகளும் அடியோடு வறண்டதால், சென்னையின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, தொழிற்சாலைகள், வணிக நிறு வனங்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளன.

தண்ணீர் பஞ்சத்தால் சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்தோ அல்லது பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு சென்றோ பணியாற்றுமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான ஐடி நிறுவனங்களில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனங்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது 4 ஆயிரம் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் அதற்கும் தற்போது வழியில்லாததால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தோ அல்லது பெங்களூர், ஹைதிராபாத் போன்ற நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கு சென்று பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 20 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள் உட்பட சுமார் 20 ஆயிரம் பேரை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளன.

அதே போல் கடுமையான குடிநீர் பஞ்சம் காரணமாக சென்னையில் உள்ள பல ஓட்டல் கள் மூடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

கடும் தண்ணீர் பஞ்சத்தால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மக்கள் கூட வீட்டை காலி செய்துவிட்டோ அல்லது பூட்டி விட்டோ தங்கள் சொந்த ஓருக்கு சென்று விட்டனர். இது வரை இப்படி ஒரு தண்ணீர் ஏற்படவில்லை என்று பொது மக்கள் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக பேசிய அதிகாரிகள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து குடிநீரை பெற்று கடும் சிரமத்துக்கிடையே பொதுமக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அதனால், வணிக தேவையை பூர்த்தி செய்ய வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.