விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2 ஆவது வார்டு திமுக வேட்பாளர் முத்தையா மரணமடைந்ததை அடுத்து, அந்த வார்டில் மட்டும் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2 ஆவது வார்டு திமுக வேட்பாளர் முத்தையா மரணமடைந்ததை அடுத்து, அந்த வார்டில் மட்டும் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சியின் 2 ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட முத்தையா என்பவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் வத்திராயிருப்பு பேரூராட்சி 2 ஆவது வார்டுக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேருராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 இல் வத்திராயிருப்பு தேர்வுநிலைப் பேரூராட்சி வார்டு எண் 02க்கான உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் படிவம் 09ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் உதய சூரியன் சின்னத்தில் வார்டு எண் 02க்கு பேரூராட்சிமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் முத்தையா என்பவர் 14.02.2022 அன்று அதிகாலை 1.40 மணிக்கு இயற்கை எய்திவிட்டார் என்று பதிவாளர் பிறப்பு மற்றும் இறப்பு சான்று அரசு மருத்துமனையால் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மேற்கண்ட வார்டு எண் 02க்கான பேரூராட்சி மன்ற உறுப்பினர் தேர்தல் விதி 31 (1) சி-ன் படி தமிழ்நாடு நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) 2006 விதிகளின்படி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தேர்வுநிலைப் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரால் ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம் 36 ஆவது வார்டு மற்றும் மயிலாடுதுறை நகராட்சி 19 ஆவது வார்டு தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
