நேற்று முன்தினம் வீசிய  கஜா புயலால் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில், விவசாயி ஒருவருக்கு சொந்தமான, ஒரு டன் எடையுள்ள கூடாரத்தை, பல மீட்டர் துாரத்துக்கு சுழற்றி வீசியுள்ளது. அந்த அளவுக்கு கஜா  புயல், கடும் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது.

இந்த கஜா புயல் மற்றும் இதனைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலைகள்  புயல் போன்றவை குறித்து  தனியார் வானிலை ஆய்வு நிறுவன தலைவர் செல்வகுமார் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது கஜா புயல், தமிழகம் மற்றும் கேரளாவை தாண்டி, அரபிக்கடலில் நுழையும். அப்போது, அரபிக்கடலில் மீண்டும் ஈரப்பதம் கூடினால், வலுவிழந்த கஜா, மீண்டும் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்தார்.

இதே போல் இன்று, அந்தமான் மற்றும் சுமத்ரா தீவுக்கு அருகே, ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இது, படிப்படியாக நகர்ந்து, இலங்கை வழியாக, டெல்டா மாவட்டங்களுக்கு வரும்.

இது, புயலாக மாறுமா அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மழையை கொடுக்குமா என, போகப்போக தெரியும். பெரும்பாலும் புயலாக மாறி, நாகை- சென்னை இடையே கரையை கடக்கலாம். அதனால், 20ம் தேதி முதல், அதிக மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல, பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் இருந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை, 21ம் தேதி, அந்தமான் தீவுகளுக்கு வரும். இது, கஜாவை போல், புயலாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விதிகளின் படி, இந்த புயலால், 100 கி.மீ., வேகத்தில், காற்று வீச வாய்ப்புள்ளது.

இந்த புயல், வங்க கடலின் மேற்கு நோக்கி நகர்ந்து, தமிழக கடல் பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளது. இது, சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு, அதிக மழை தரலாம்.

தற்போதைய சூழலில், வடகிழக்கு பருவமழையில், எட்டு விதமான காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. ஏழு நாட்களுக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்.

வங்கக்கடலில், நவம்பரில் மூன்று,  டிசம்பரில் நான்கு,  ஜனவரியில் ஒரு காற்றழுத்த அமைப்பு என, மொத்தம், எட்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக செல்வகுமார் தெரிவித்தார்.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் பெரும்பாலும், தமிழகத்தை நோக்கியே வர வாய்ப்புகள் உள்ளன.சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழகத்துக்கு வட கிழக்கு பருவமழை ஏமாற்றாது. வரும் நாட்களில் எதிர்பார்த்த மழை இருக்கும் என  செல்வகுமார் கூறினார்.