திருவள்ளூர் 

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 30 செம்மரக்கட்டைகள் கடத்தி சென்ற இருவரை திருவள்ளூரில் காவலாளர்கள் வாகன சோதனையின்போது கையும் களவுமாக பிடித்தனர். 

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியட் சீசர் மேற்பார்வையில் ஆய்வாளர் சித்ரா தலைமையில் காவலாளர்கள் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நடந்த இந்த வாகன சோதனையின்போது ஆந்திராவில் இருந்து அந்த வழியாக வந்த காரை காவலாளர்கள் மறித்தனர். 

அப்போது, கார் ஓட்டுநரும், உடன் வந்த நபரும் தப்பியோட முயன்றனர். இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த பொன்னேரி மதுவிலக்கு அமலாக்கப்பரிவு காவலாளரான சந்திரசேகரன் ஓடிச்சென்று காரின் சாவியை எடுத்து காரை நிறுத்தினார். இதில் சந்திரசேகரனுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. 

பின்னர் காரை சோதனை செய்தபோது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரக்கட்டைகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.  அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த சுரேஷ்பாபு (28), அவருடன் வந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பாலசந்திரா (30) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் காவலாளர்கள் கைது செய்தனர். 

காரில் மொத்தம் 250 கிலோ எடை கொண்ட 30 செம்மரக்கட்டைகள் இருந்தது. இதுகுறித்து வனசரகர் மாணிக்கவாசகம் தலைமையில் வனத்துறையினர் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.