திருவனந்தபுரத்தில் உள்ள அரண்மனை ராஜயோக நாற்காலியில் யாராவது அமர்ந்தால் அவர்கள் மிகப் பெரிய பொறுப்புக்கு வருவார்கள் என்பது ஐதீகம். ஆனால் அந்த நாற்காலியில் யாரும் சாதாரணமாக அமர முடியாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

அந்த ராஜயோக நாற்காலியில் நேரு ஒரு முறை அமர்ந்து சென்றார். அவர் இந்தியாவின் பிரதமரானார். குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி ராஜயோக நாற்காலியில் அமர்ந்தார். அவரும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அந்த நாற்காலியில் அமர வைக்கப்பட்டவர்கள் பெரும் பொறுப்புக்கு வருவார்கள் என நம்பப்படுகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் அரண்மனையில் இருந்து டி.டி.வி. தினகரனுக்கு அழைப்பு வந்துள்ளது.

தொடக்கத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தினகரன் பல முறை அங்கு செல்வதை தள்ளி வைத்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில் அரண்மனை குறித்து கேள்விப்பட்ட டி.டி.வி. கடந்த  வாரம் அங்கு விசிட் அடித்துள்ளார்.

அரண்மனைக்கு வந்த தினகரனுக்கு அதன் வாரிசுகள் தடபுடல் வரவேற்பு அளித்துள்ளனர். பூஜை,புனஸ்காரங்கள்  செய்து தினகரனுக்கு மாலை அணிவித்த அரண்மனை வாரிசுகள் அவரை ராஜயோக நாற்காலியில் அமர வைத்துள்ளனர்.

இந்த நாற்காலியில் அமர்ந்து விட்டீர்கள் அல்லவா ? இனி நீங்கதான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என தினகரனிடம் சொல்லி அவரை மகிழ்ச்சி படுத்தியுள்ளனர்.மேலும் அங்கு பிரஸ்னம் பார்க்கும் சிலர் தினகரனின் ராசி  ராஜயோகம் கொண்டது எனவும் கூறி குஷிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு சத்து டானிக் கொடுத்தது போல உள்ளது. ஒரே சந்தோஷத்தில் மிதக்கின்றனர்.