நகர்ப்புற தேர்தலையொட்டி வரும் 19 ஆம் தேதி நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்தலுக்கு மறு நாள் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறும் என்று ஆசியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் போட்டித் தேர்வுகள் மூலமாக ஆசிரியர்கள் பணியமர்த்தபடுகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் தகுதிதேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக 2 வருடங்களாக பள்ளிகள்மூடப்பட்டிருந்ததால் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்படவில்லை. அதனால் ஆசிரியர் தகுதித்தேர்வும் (டெட்) நடைபெறவில்லை. தற்போது கொரோனா மூன்றாம் அலை தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது.

அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளதால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளதால் பள்ளிகளில் கற்பித்தலில் தொய்வு ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதனை அடுத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டது. 

அதன்படி நடப்பாண்டில் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் 9,494 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அண்மையில் ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி முதுகலை பட்டதாரி, உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழகத்தில் விரைவில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது . ஏற்கனவே வாக்குப்பதிவு நாளான பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள், கல்லூரி தேர்வுகள் ஓத்திவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது முதுகலை பட்டதாரி, உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி, இந்தத் தேர்வுகள் வாக்குப்பதிவுக்கு மறுநாளான பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) அறிவித்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெற இருந்த ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வு ஏற்கனவே அறிவித்த படி நடைபெறும் என்றும் . பிப்ரவரி 19ம் தேதி நடைபெற இருந்த தேர்வு மட்டும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஆர் பி அறிவித்துள்ளது.