பொது வேலை நிறுத்தம் காரணமாக, மார் 28, 29 ஆம் தேதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பொது வேலை நிறுத்தம் காரணமாக, மார் 28, 29 ஆம் தேதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயங்கி வரும் சில தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் முழு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூடாது என்றும், அன்றைய தினம் போராட்டம் நடத்துபவர்கள், விடுப்பு எடுப்பவர்களது சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர், "போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிக்கும் அதே வேளையில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் பேசிய அவர், அரசு நகர பேருந்துகளில் மகளிர் பயணம் செய்வதற்கு கட்டணம் கிடையாது என்று அறிவிப்பிற்கு பிறகு அதிகளவில் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்து பலனடைந்து வருகின்றனர். நாங்கள் எதிர்பார்த்ததை விட 40 % லிருந்து 62 % வரை கூடுதலாகவே அரசு பேருந்துகளில் பயணம் செய்துவருகின்றனர்.
இதனாலே , தமிழக அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் மகளிர் இலவச பேருந்து பயணத்திற்கு, 1,510 கோடியிலிருந்து 1,900 கோடியாக உயர்த்தி நிதி ஒதுக்கியுள்ளது. இதனிடையே அரசு போக்குவரத்து கழகத்தில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வால் எந்த பாதிப்பு ஏற்படாது என்று விளக்கமளித்த அமைச்சர், இதற்காக 22 ரூபாய் வரை மானிய விலையில் டீசல் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது என்றார்.
மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ளுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஆர்.டி.ஓ அலுவலர்கள், போலீசார் மூலம் மாணவர்களுக்கு போதிய அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் மாணவர்களால் பிரச்சனை ஏற்படுவதாக கிடைத்துள்ள தகவலின் படி, அங்கும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். முதலமைச்சர் உத்தரவின் படி, இடர்பாடின்றி மக்கள் செல்லும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் தற்போது 18 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் கூடுதலாக 4 ஆயிரம் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இதற்காக நடத்துநர்கள், ஓட்டுநர்கள் கூடுதல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
