Asianet News TamilAsianet News Tamil

திருநங்கைகளை உருட்டுக் கட்டை, அரிவாளால் வெட்டி சரமாரி தாக்குதல்; திருவண்ணாமலையில் பரபரப்பு...

transgenders attacked by sickel in thiruvannamalai tension
transgenders attacked by sickel in thiruvannamalai tension
Author
First Published May 16, 2018, 10:13 AM IST


திருவண்ணாமலை
 
திருவண்ணாமலையில் திருநங்கைகள் மீது உருட்டுக் கட்டை, அரிவாள் வெட்டு தாக்குதல் நடைப்பெற்றதால் திருநங்கைகள் பலத்த காயம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்னிந்திய திருநங்கைகளின் கூட்டமைப்பின் சார்பில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான கூட்டம் வேலூரில்  நடைப்பெற்றது. 

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். 

அப்போது, "திருவண்ணாமலை மாவட்டத்தில் திருநங்கைகள் சிலர் கடைகளில் பணம் கேட்டு அராஜகம் செய்வதாகவும், 

திருவண்ணாமலை வேங்கிக்கால் எழில் நகரை சேர்ந்த அன்பழகி என்ற திருநங்கை மூத்த நிர்வாகிகளை அவதூறாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுத்துவும் வேண்டும்" என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலைக்கு கார்களில் வந்தனர். பின்னர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ராதிகா, துணைத் தலைவர் பாரதி மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசினர்.

திருநங்கைகளுக்கான அங்கீகாரம் கிடைக்க சமூகத்தில் அராஜக போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது என்பதை எடுத்துரைத்து பேசுவதற்கு திருநங்கைகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் வேங்கிக்கால் எழில் நகரில் வசிக்கும் அன்பழகி வீட்டுக்கு காரில் சென்றனர். 

இதனை முன்னரே அறிந்து கொண்ட அன்பழகி, சில திருநங்கைகள் மற்றும் ஆதரவாளர்களுடன் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தார். அப்போது வீட்டுக்குள் வந்த திருநங்கைகள் மீது பதுங்கி இருந்த திருநங்கைகளின் ஆதரவாளர்கள் அரிவாள், உருட்டுக்கட்டை, கத்தி ஆகியவற்றால் திடீர் தாக்குதலை நடத்தினர். 

இந்த எதிர்பாராத தாக்குதலில் திருநங்கைகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நிலை குலைந்தனர். ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் வேலூரை சேர்ந்த சீதா, மாதவி, விழுப்புரத்தை சேர்ந்த அருணா, புதுச்சேரியை சேர்ந்த சரிகா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இதில் அருணாவிற்கு தலையில் 18 தையல் போடப்பட்டது. அத்துடன் 2 கால் முட்டிகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதேபோல் சரிகாவிற்கும் தலையில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து திருநங்கைகளின் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றனர்.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கூட்டமைப்பை சேர்ந்த திருநங்கைகள் காவல் நிலையம் முன்பு பகல் 1 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அவர்களிடம் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வழக்குப்பதிவு செய்வதாக கூறினர். இதையடுத்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். 

அதைத் தொடர்ந்து காவலாளர்கள் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சரிகா கொடுத்த புகாரின்பேரில் அன்பழகி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios