தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

இங்கு பாதுகாப்பு பணியில் தனியார் நிறுவனத்தின் காவலாளிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் காவலர் பணிக்கு முதன் முறையாக 8 திருநங்கைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் நேற்று வழங்கினார்.

திருநங்கைகள் ராகினி, சத்யா, தர்ஷினி, மயில், பாலமுரளி, முருகானந்தம், ராஜேந்திரன், மணிவண்ணன் ஆகியோர் மகப்பேறு வார்டில் காவலாளிகளாக ஒரு ஷிப்டில் 4 பேர் வீதம் 2 ஷிப்டிலும் 8 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகள் காவலாளிகளாக நிமயனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்


சாலையில் நடந்து செல்லும் தங்களை அனைவரும் கேலி செய்யும் போது கண்ணீர் சிந்தியதாக கூறும் திருநங்கை தர்ஷினி, தற்போது எங்களையும் மதித்து இந்த வேலை கொடுத்திருப்பதால் மற்றவர்கள் தங்களை சமமாக மதிப்பதாக பெருமை கொள்கிறார்.

தங்களுக்கு பணி வழங்கிய மருத்துவ கல்லூரி முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சரும் நன்றி தெரிவிக்கும் திருநங்கைகள், மற்ற துறைகளிலும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.