தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவர். அதனால் பண்டிகை காலங்களில் ரயில்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறையை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. 

இந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சிலர் தீபாவளி சமயங்களில், ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் நவம்பர் 2ம் தேதி பயணம் செய்யும் பயணிகள், இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். 

இன்று காலை முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 3ம் தேதி சனிக்கிழமை பயணம் செய்வோர் ஜூலை 6ம் தேதி, நவம்பர் 4ம்தேதி ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் செல்பவர்கள் ஜூலை 7ம் தேதியும் முன்பதிவு செய்யலாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.