Asianet News TamilAsianet News Tamil

இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள்! மாமல்லபுரம் கடற்கரையில் பரபரப்பு!

கடல் வாழ் உயிரினங்களில் முக்கியமானது ஆமைகள். மனிதனின் உணவுச்சங்கிலியில் முக்கிய இடத்தினை ஆமைகள் வகிக்கின்றன.

Tortoises death in mamallapuram beach
Author
Kanchipuram, First Published Dec 28, 2018, 11:21 AM IST

கடல் வாழ் உயிரினங்களில் முக்கியமானது ஆமைகள். மனிதனின் உணவுச்சங்கிலியில் முக்கிய இடத்தினை ஆமைகள் வகிக்கின்றன.

அண்மைக்காலமாக ஆமைகள் குறித்த விழிப்புணர்வு ஓரளவு உருவாக்கப்பட்டு வந்தாலும் இன்னும் அதன் இலக்கை எட்டிய பாடில்லை. கடந்த சில நாட்களாக சென்னை, திருவான்மியூர் தொடங்கி மரக்காணம் வரை கடற்கரை பகுதியில் ஆமைகள் செத்து ஒதுங்குவது தொடர்கதையாகி விட்டது.

Tortoises death in mamallapuram beach

பொதுவாக ஆமைகளுக்கு டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை இனப்பெருக்க காலமாகும். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நீந்தி கடற்கரையில் முட்டைகளை மணலில் இட்டுச்செல்ல அவைகள் கடற்கரைகளை நோக்கி பயணிக்கின்றன.

இவ்வாறு பயணிக்கும் ஆமைகள் மீனவர்களின் படகுகளில் சிக்கி அடிபட்டு இறக்கின்றன. அவற்றில் தப்பித்தால் மீனவர்கள் வீசும் விசைப்படகு வலை, கில்லட்டின் வலை, திருக்கை வலை ஆகியவற்றில் சிக்குகின்றன. இவ்வாறு வலைகளில் சிக்கும் ஆமைகளை விழிப்புணர்வு இல்லாத மீனவர்கள் கட்டைகளால் அடித்து தலையைத் துண்டித்து கடலில் வீசுகின்றனர். இப்படி பல சோதனைகளை தாண்டி கடற்கரைக்கு வரும் ஆமைகளை நாய்கள் பதம் பார்க்கின்றன.

Tortoises death in mamallapuram beach

கிட்டத் தட்ட 90 சதவீத ஆமைகள் இப்படி இறந்து விட மீதமுள்ள 10 சதவீத ஆமைகளே கடற்கரைக்கு வந்து குழி தோண்டி முட்டைகளை இடுகின்றன. பின்னர் அவற்றில் இருந்து வெளிவரும் ஆமைக்குட்டிகள் மீண்டும் கடலுக்கு செல்லும்போது பெரிய மீன்களிடம் சிக்கி உணவாகின்றன.

கடலில் உள்ள உயிரினங்களில் காற்றை சுவாசிக்கும் உயிரினங்களில் முக்கியமானது ஆமைகள். குறிப்பாக தமிழக பகுதிகளில் கரை ஒதுங்கும் ஆமைகள் ஆலிவ் ரிட்லீ வகையாகும். இவைகள் 40 நிமிடங்களுக்கு ஒரு முறை கடலுக்கு மேலே வந்து சுவாசிக்கின்றன. இந்த ஆமைகளை பாதுகாக்க மீனவ மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் காலை 4 மணி முதல் 6 மணி வரையும், இரவில் 10 மணிக்கும் கடற்கரையில் இறந்து ஒதுங்கும் ஆமைகளை அளவெடுத்து எடை பார்த்து புதைக்கின்றனர்.

Tortoises death in mamallapuram beach

கடந்த ஆண்டு இனப்பெருக்க காலத்தில் நவம்பர் முதல் பிப்ரவரி ஆகிய நான்கு மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து ஒதுங்கின. ஆனால் இந்த ஆண்டு இவ்வாறு இறக்கும் ஆமைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு மீனவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம். கடல் ஆமைகள் கடலில் உள்ள கடற்பாசி, புல் போன்ற தாவரங்களை சாப்பிட்டு மீன்கள் குஞ்சு பொரிக்க ஏதுவான இடத்தை உருவாக்கித் தருகின்றன.

மேலும் மீன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விஷமுள்ள கடற்பாசிகளையும் ஆமைகள் சாப்பிடுகின்றன. இதன்மூலம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் பெரும் உதவி புரிகின்றன. இதை மீனவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 1974 முதல் 1979 வரை தமிழகக் கடலோரப் பகுதிகளில் 1 கி.மீ தூரத்தில் 100 முட்டைக்கூடுகள் இருந்தன. தற்போது 1 கி.மீ. தூரத்திற்கு ஒரே ஒரு கடல் ஆமை முட்டைக்கூடு மட்டுமே உள்ளது.

30 ஆண்டுகளில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரின உணவுச்சங்கிலியில் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே, ஆமைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வை அரசுதான் ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios