தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தற்போது வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தண்ணீருக்காக தினந்தோறும் அவதிப்படும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் சென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது.  அவசியமான காரணங்கள் இன்றி வெளியில் நடமாட வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.


 
ஆனாலும்  கடந்த சில நாட்களாகவே  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அந்தந்தப் பகுதிகள் குளிர்ந்தன. பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அரும்பாக்கம், தி நகர், வளசரவாக்கம், அசோக்நகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், எழும்பூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மேலும், ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர், திருநின்றவூர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே இன்று இரவு சென்னை முழுவதும் கனமழை கொட்டித் தீர்க்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது அவர் தனது முகநூல் பக்கத்தில், வெப்பச் சலனத்தால் மழை மேகங்கள் தூண்டப்பட்டு, இன்று இரவு சென்னையில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மழை ஆவடி, அம்பத்தூரில் இருந்து அப்படியே சென்னைக்குள் நுழையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சென்னையில் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. தொடர்ந்த இன்று இரவு முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.