சென்னை உள்பட வட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வெப்பம் குறைந்து  மேக மூட்டமான வானிலை நிலவி வருகிறது.  

இந்தநிலையில் மழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது தென் மேறகு  பருவமழை தொடர்ந்து கர்நாடகா பகுதிகளில் வலுவாக உள்ளது. 

தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு அதாவது இன்று  வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும். 

வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு ஓரிரு முறை இடியுடன் கூடிய  கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 1-ந்தேதி முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் 89 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பான மழை அளவு 117 மி.மீட்டர் ஆகும். இது இயல்பை விட 24 சதவீதம் குறைவு  என பாலசந்திரன் தெரிவித்தார்.