கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கிய தென் மேற்கு பருவமழையால் கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதுவும் கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்தது.

கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டுர் அணை இந்த ஆண்டு மூன்று முறை நிரம்பி வழிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை, நீலகிரி,தேனி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மட்டும் மழை பெய்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் வலுப்பெற்று வந்த தென் மேற்கு பருவ மழை, வட மாநிலங்களுக்கு நகர்ந்துள்ள நிலையில்  வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருகிறது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது என்றும் , இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் எனவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், நந்தனம் பகுதிகளிலும்,  தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளிலும் மழை பெய்தது. இதே போன்று டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.

இந்த நிலையில் இன்றும், நாளையும் தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில்  மழை தீவிரமாக பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் தென் மாவட்ட மக்கள் மழையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.