Asianet News TamilAsianet News Tamil

புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது..தேர்தல் நடத்தை விதிகள் அமல்- மாநில தேர்தல் ஆணையம்.. முழு விவரம்..

நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

TNSEC Announcement Urban Local Body Election
Author
Tamilnádu, First Published Jan 26, 2022, 8:37 PM IST

கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு, தேர்தலை தள்ளிவைக்க முடியாது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் கூறியது.இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார். இதன்பின் பேசிய அவர், சென்னைக்கு மட்டும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்படும் என்றும் இதர மாவட்டங்களுக்கு தலா ஒரு பார்வையாளர் நியமனம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 1.33 லட்சம் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர், 80,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கண்காணிப்புடன் நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் 31,029 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். சொத்து, குற்றவியல் விபரம் போன்றவற்றை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் முடிந்த 30 நாட்களில் தேர்தல் செலவினங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

1,374 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு நேரடி தேர்தலும், 1,298 பதவிகளுக்கு மறைமுக தேர்தலும் நடைபெறும் என  அறிவித்தார். சென்னை உட்பட 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. மேலும்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மாநில தேர்தல் ஆணையர் வெளியிட்டார். 

அதில், தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தலாம். தனி நபர் ரூ.50,000 வரை கொண்டு செல்லலாம், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள், பறக்கும் படையினரின் விவரங்கள் நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்த ஆணையர், குடியரசு தின அலங்கார ஊர்தி பேரணி முன்னரே தொடங்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் செல்வதற்கு அனுமதி உண்டு என்றும் குறிப்பிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios