அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், குரூப்-2 ,குரூப் 2- ஏ தேர்வுகள் வரும் மே 21ல் நடைபெறுகிறது.இந்தத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5ஆம் தேதி வெளியிடப்படும். குரூப்-2, குரூப்-2ஏ பணிகளுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பாணை வரும் 23ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகிறது. என்று கூறினார்.
ஆவின், மின்சார வாரியம் ,வீட்டுவசதி வாரியம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட இதர வாரிய பணியிடங்களை குரூப் 2, குரூப் 2ஏ உள்ளிட்ட தேர்வுகளில் வகைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மார்ச் 3ஆம் தேதி அதற்கான விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குரூப் II தேர்வில் முதல் நிலை தேர்வு (PRELIMINARY), முதன்மை தேர்வு (MAINS), நேர்காணல் என்கிற படிநிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குரூப் II A பிரிவில் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மட்டுமே உண்டு.நேர்காணல் இன்றி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.முதல்நிலைத் தேர்வு என்பது கொள்குறி வகைத் தேர்வாகவும் (Objective Type), முதன்மைத் தேர்வு என்பது விரிவான எழுத்துத் தேர்வாகவும் (Descriptive Type) இருக்கும்.
மே மாதம் நடத்தப்படும் முதல்நிலை தேர்வுகளுக்கு ஜூன் மாதம் முடிவுகள் வெளியிடப்படும். செப்டம்பரில் முதன்மை தேர்வு நடைபெறவுள்ளது. மேலும் டிசம்பர் 2022 - ஜனவரி 2023 இல் கலந்தாய்வும் நடைபெறும் என TNPSC தெரிவித்துள்ளது. மேலும் "தமிழ் ஆங்கிலம் என இரு பிரிவுகளில் இந்தத் தேர்வினை எழுதலாம். தமிழ் பிரிவில் தமிழில் 100 கேள்விகள்,பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும்.
ஆங்கிலத்தில் தேர்வெழுத விரும்புவோருக்கு பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும். இவற்றின் மொத்த மதிப்பெண் 300க்கு எடுத்துக்கொள்ளப்படும்.தேர்வில் 90-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெறுவோர் தேர்ச்சி பெறாதவர்கள் என்று கூறினார்.
இதனிடயே இதுவரை காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வுகள்,இனி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.அதன்படி காலை வேளையில் 9.30 முதல் 12.30 வரை, பிற்பகல் வேலையில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மொத்தம் 32 நகரங்களில் 117 மையங்களில் நடைபெறுகிறது.மாலையில் நடைபெறும் தேர்வில் எந்த நேரமாற்றமும் இல்லை. தேர்வில் ஜெல் பேனா, பால் பாயிண்ட் பேனாக்கள் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நியமிக்க உள்ள காலிபணியிடத்தில் 124 பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் தரப்பட்டுள்ளது.
