தேனி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக வெற்றி செய்தி கேட்ட திமுக வேட்பாளர் மயங்கி விழுந்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை துவங்கி தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துவக்கம் முதலே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆளும் கட்சியான திமுக அமோக வெற்றி பெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதும் தேர்தல் முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தேனி மாவடத்தின் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் வாக்கு எண்ணிக்கை நிறைவுற்று முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலமுருகன் 678 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 118 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்யி அடைந்தார்.
மொத்தம் 560 வாக்குகளையே பெற்ற திமுக வேட்பாளர் கார்திக் ராஜா தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகத்திலேயே மயக்கம் அடைந்த திமுக வேட்பாளரை காவல் துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதை அடுத்து பல இடங்களில் திமுக வெற்றி பெற்று வருகிறது. இதனால் திமுக வினர் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இன்ப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
