நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் திமுக, அதிமுக அடுத்தபடியாக பல்வேறு இடங்களில் பாஜக அதிக அளவில் வாக்குகள் பெற்றுள்ளன.சென்னை மாநகராட்சியிலும் ஒரு வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்.,19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 21 மாநகராட்சி,138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகிய நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது. தற்போது பெரும்பாலான வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
நகர்ப்புற தேர்தலில் 21 மாநகராட்சிகளை திமுக கைபற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.மேலும் 132 நகராட்சிகள்,435 பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து களம் கண்ட பாஜக பெரும்பாலான இடங்களில் அதிக வாக்குகள் பெற்று 3 ஆவது கட்சியாக இடம் பிடித்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் 134 வது வார்டு பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்.
அதே போல் நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளிலும் ஒரு சில வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக நாதக, மநீம கட்சிகள் ஒரு இடங்களிலும் வென்றி பெறாத நிலையில் பாஜகவின் இந்த வாக்கு சதவீதம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.இந்நிலையில் பாஜகவினர் தங்களது வெற்றியை கொண்டாடும் வகையில் டிவிட்டரில் #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு எனும் ஹேஷ்டேக் வைரலாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி , தமிழகத்தில் பாஜக ஒரு போதும் காலூன்ற முடியாது என்று ஆவேசமாக பேசினார். அவரது அந்த பேச்சு இந்தியா முழுவதும் பேசும் பொருளானது.இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிகளவில் வாக்கு பெற்றுள்ளது. மேலும் திமுக, அதிமுக அடுத்தப்படியாக பாஜக பல்வேறு இடங்களில் 3 வது இடத்தில் உள்ளது.
பல்வேறு கட்சிகளை பின்னுக்கு தள்ளி பாஜக அதிகளவில் வாக்கு சதவீதம் பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். எனவே காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அப்போது பேசிய வீடியோவை டேக் செய்து, உங்கள் வாய்பேச்சால் தான் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்றும் பாஜகவினர் காலாய்த்து வருகின்றனர்.
