நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்கள் தரமில்லை என்றால் திருப்பி அனுப்பலாம் என்று ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள பல ரேஷன் கடைகளுக்கு அரிசு, பருப்பு, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஏழை மக்கள் ரேஷன் அரிசியை நம்பித்தான் இருக்கின்றனர். அந்த அரிசியில் புழு, வண்டுகள் கிடப்பதை பார்க்க முடிகிறது.
இப்படி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாய் இருப்பதால் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதில், நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைக்கு வரும் பொருட்கள் தரமாக இல்லை என்றால் ஊழியர்கள் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காகத் தமிழக அரசு சார்பில் 1,300 கோடி நிதி ஒதுக்கீட்டில் பச்சரிசி, வெள்ளம், கரும்பு உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டை தார்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு வழங்கிய தொகுப்பில் பொருட்கள் தரமற்ற வகையில் இருந்ததாகவும் , சில இடங்களில் 21 க்கும் குறைவாகே பொருட்கள் இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் சில பகுதிகளில் வழங்கப்பட்ட பரிசு தொகுப்பில் வெல்லம், ஒழுகிய நிலையில் தரமற்றதாக இருந்ததாகவும் புளியில் பல்லி, மிளகில் கலப்படம் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி சார்பில் பொதுமக்களுக்கு தரமான பரிசு தொகுப்பு வழங்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.பின்னர் இதுக்குறித்து முதலமைச்சர் தலைமையில் அமைச்சர் சக்கரபாணி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர், பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் வைக்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாடு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்கள் தரமில்லை என்றால் திருப்பி அனுப்பலாம் என்று ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
