இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் , வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறி உள்ளது. அந்த புயலுக்கு ‘தித்லி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

அந்த புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கில் 530 கி.மீ. தூரத்திலும், ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்திற்கு தென்கிழக்கில் 480 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டு உள்ளது.

இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். அது நாளை காலை கலிங்கபட்டினத்திற்கும், கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல  இடங்களிலும், சென்னையிலும் கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூர் 11 செ.மீ., வாடிப்பட்டி 9 செ.மீ., அவினாசி, சேலம், மேட்டுப்பாளையம், தர்மாபுரம், போடிநாயக்கனூர், சோழவந்தான், கோபிசெட்டிப்பாளையம், திருச்செங்கோடு, நெய்வேலி தலா 6 செ.மீ., கேத்தி, ஊட்டி, சின்னக்கல்லார், அரவக்குறிச்சி, முதுகுளத்தூர், வந்தவாசி, தர்மபுரி தலா 5 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளதாக பாலசந்திரன் தெரிவித்தார்.

தித்லி’ புயல் காரணமாக சென்னை, எண்ணூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பனில் நேற்று இரவு 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.