அரியலூர்
 
அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள், ரூ.10 ஆயிரம் பணத்தை திருடி சென்ற கொள்ளையர்களை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள காரைபாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலு (55). இவரது மனைவி கிருஷ்ணவேணி (40). 

நெசவுத் தொழிலாளியான பாலு தற்போது நெசவுத்தொழில் நலிவடைந்ததால் தனது மனைவியுடன் சென்னையில் தங்கி அங்குள்ள துணிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலு சொந்த ஊருக்கு வந்திருந்தார். கடந்த 4-ஆம் தேதி பாலு வீட்டை பூட்டிவிட்டு மனைவி கிருஷ்ணவேணியுடன் ஆடுதுறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். 

இந்த நிலையில் நேற்று பாலுவின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து பாலுவுக்கு தகவல் கொடுத்தனர். உடனே வீட்டுக்கு பாலு தனது மனைவியுடன் வந்தார். அதன்பின்னர் அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். 

அப்போது பீரோவில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் திருமானூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிந்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.