உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், 2 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

பல தொடக்க பள்ளிகளில் குழந்தைகளுக்கு அதிகமாக வீட்டுப் பாடம் கொடுப்பதாக தொடர்ந்து எழுந்து வரும் குற்றச்சாட்டுகளை அடுத்து, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆணையம் தனது விதிமுறைகளை தெளிவுபடுத்தியுள்ளது. தனது பாடத்திட்டத்தை பின்தொடரும், சிபிஎஸ்இ பள்ளிகளில், 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கிற்கு பதிலளித்தபோது NCERT இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த வழக்கில், 1 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் 3 பாடங்கள்தான் இருக்க வேண்டும் என NCERT விதிமுறைகளில் இருந்தாலும், பல பள்ளிகளில் 8 பாடங்கள் வரை கற்றுக்கொடுப்பதாக கூறப்பட்டிருந்தது. மேலும், திறமையை கணக்கிட்டு மாணவர்களை பிரித்து பயிற்சி கொடுக்கும் பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த NCERT, 2 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் வழங்கப்படாது, என்றும், 3 ஆம் வகுப்பு வரை, மூன்றே பாடங்கள் தான் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதை நாடு முழுவதும் தங்களது பாடத் திட்டத்தை பின்பற்றும் 18,000 சிபிஎஸ்இ பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது. இந்த மாணவர்களுக்கு மொழி மற்றும் கணித பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும். தனியார் நிறுவன புத்தகங்களை வாங்கி வேறு எந்த பாடங்களையும் நடத்தக்கூடாது. இதை மீறி தனியார் பள்ளிகள் செயல்பட்டால், அந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை உடனே ரத்து செய்து, அந்த பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என பள்ளிக்கல்வி துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தலைமை கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.