தமிழக பள்ளிக்கல்வித்துறை தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது.

பொதுத்தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் 10-ம் வகுப்புக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு இன்று துவங்கி 15ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் நடத்தப்படுகிறது.

இதேபோல் 12ஆம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு இன்று தொடங்கி 16ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதியும் முடிகிறது. திருப்புதல் தேர்வு பொதுத்தேர்வைப்போல் நடத்தப்படவுள்ளதால் அனைத்து மாவட்ட பள்ளிகளில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், 10,12 ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

எனவே 10,12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வுத்தேதி மாற்றம் குறித்த விபரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.