நாளை முதல் பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா ?
தமிழகத்தில் நாளை முதல் நர்சரி பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடந்த ஆண்டு கடுமையாகத் தாக்கியது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதை அடுத்து கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதே போல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஆனால் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே, கொரோனா மூன்றாவது அலை தாக்கம் குறைந்ததற்கு பிறகு, கடந்த 1 ஆம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று ( 15-ஆம் தேதியுடன்) முடிவடைய உள்ள நிலையில்,ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில்,தற்போது கூடுதல் தளர்வுகளுடன்,தமிழகம் முழுவதும் மார்ச் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுபாடுகள் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும்,சில புதிய தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் தொடர்ந்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திடவும். குறைத்திடவும் பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் நாளை (16-2-2022) முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.
சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. எனவே நாளை முதல், நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.