கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அந்த வாலிபர், கைவிலங்கை உடைத்து கொண்டு தப்பிவிட்டார். இதனால், போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே சணல்வெளி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டது. இதனால், திடுக்கிட்ட அப்பகுதி மக்கள், அங்கு வந்து பார்த்தபோது, பொதுமக்களை கண்டதும் ஒரு வாலிபர் தப்பியோடினார். உடனே பொதுமக்கள், அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார், படுகாயமடைந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில், சென்னையை சேர்ந்த சந்தோஷ் என தெரிந்தது. இதையடுத்து அவரை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கட்டிலில், கைவிலக்கு போட்டு பூட்டி வைத்தனர்.

நள்ளிரவில், போலீசார் கண் அயர்ந்தபோது, கைவிலங்கை உடைத்து கொண்டு அந்த வாலிபர், தப்பிவிட்டார். அதிகாலையில் போலீசார் எழுந்து பார்த்தபோது, கைதியை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.