கள்ளக்காதலை மறைத்து தன்னை போலீசில் மாட்டி விட்டதால் பழிவாங்க கள்ளக்காதலியின் மகனை கடத்தி சென்று துடிக்க துடிக்க பீர் பாட்டிலால் அவனது கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சென்னை நெசப்பாக்கம் பாரதி நகர் ஏழுமலை தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், ஏற்கனவே திருமணமாகி 2வது ஆண்டிலேயே கணவனை இழந்த மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்தார்.  கார்த்திகேயன் கட்டிடங்களில் உள் அலங்கார பணிகளை கான்டிராக்  எடுத்து செய்து வருகிறார். மஞ்சுளா அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார்.

இருவருக்கும் ரிதீஷ் சாய் என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து ராமாபுரம் ஜெய்பாலாஜி நகரில் இந்தி டியூசனுக்கு சென்றார். இரவு மகனை அழைத்து வர கார்த்திகேயன் டியூசன் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது இந்தி ஆசிரியை பொம்மி, ரிதீஷ் சாயை, நாகராஜ் என்பவர் கண் பரிசோதனை செய்ய அவரது அம்மா அழைத்து வர சொன்னதாக கூறி அழைத்து சென்றதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் தனது மனைவி மஞ்சுளாவை தொடர்பு கொண்டு நீ மகனை அழைத்து வர நாகராஜனை அனுப்பினாயா  என்று கேட்டுள்ளார். அதற்கு மஞ்சுளா நான் யாரையும் அனுப்பவில்லையே என பதரியுள்ளார்.

நாகராஜை மஞ்சுளா தொடர்பு கொண்டபோது போன் போகவில்லை. இதனையடுத்து தனது மகனுக்கு என்ன ஆனதோ என பயத்தில் நடுங்கிய கார்த்திகேயன் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.   அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து ரிதீஷ் சாய் புகைப்படங்களை வைத்து விசாரணை மேற்கண்டனர். நாகராஜ் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் நள்ளிரவு வரை எந்த முன்னேற்றமும் இல்லை. மறுநாள் அதிகாலை நாகராஜ் செல்போன் வேலூர் காட்பாடி அருகே இருப்பதாக சிக்னல்  காட்டியதை அடுத்து தனிப்படை அமைத்து நாகராஜை காட்பாடி அருகே கைது செய்தனர்.

பின்னர் நாகராஜை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நாகராஜ் சேலையூர் இந்திரா நகர் ஐஏஎப் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது அலுவலகத்துக்கு அழைத்து சென்று ரிதீஷ் சாயை இரும்பு ராடால் கொடூரமாக தலையில் அடித்தும், பீர் பாட்டிலை உடைத்து கொடூரமாக துடிக்க துடிக்க கழுத்தை அறுத்தும், படுகொலை செய்து விட்டதாகவும், உடல் அங்கு இருப்பதாகவும் கூறினார்.  

 இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீசார், சேலையூர் போலிசுக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பார்த்த போது ரிதீஷ் சாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உடனே சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மகன் இறந்த தகவலை அறிந்த பெற்றோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று ரிதீஷ் சாயின் உடலை கட்டிப்பிடித்து அழுது கதறினர். என்னை பழிவாங்க நினைத்து எனது மகனை கொலை செய்து விட்டானே என்று மஞ்சுளா கதறி அழுதார்.

இதனையடுத்து, நாகராஜை நேற்று அதிகாலை சம்பவம் நடந்த சேலையூரில் இந்திரா நகர் அடுக்குமாடி குடியிருப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் கூறியதாவது; திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை. இவரது மகன் நாகராஜ். பி.காம் படித்துள்ளார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். மூத்த சகோதரி வண்ணாரப்பேட்டையிலும், மற்றொருவர் ராயப்பேட்டையிலும் வசித்து வருகின்றனர். வேலை தேடி சென்னை வந்த நாகராஜூக்கு வளசரவாக்கத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை கிடைத்தது. நெசப்பாக்கம் ஜெய்பாலாஜி நகரில் தங்கி வேலை செய்து வந்தார். நாகராஜ் அருகில் உள்ள மைதானத்தில் வார இறுதி நாட்களில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அப்போது மஞ்சுளா மகன் ரிதீஷ்சாயும் விளையாடி வந்துள்ளார். அப்போது நாகராஜூக்கும் ரிதீஷ்சாய்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதனால் ரிதீஷ் சாய் அடிக்கடி நாகராஜை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது மஞ்சுளாவுடன் நாகராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. கணவன் கார்த்திகேயன் வேலைக்கு சென்ற உடன் நாகராஜ், மஞ்சுளா வீட்டிற்கு சென்று இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பல இடங்களில் மகன் ரிதீஷ் சாயை அழைத்து சென்று சுற்றியும் வந்துள்ளனர். மஞ்சுளா தனது கள்ளக்காதலன் நாகராஜூக்கு அதிகளவில் பணமும் கொடுத்து வந்துள்ளார். இதற்கிடையே மஞ்சுளாவின் மகன் ரிதீஷ் சாய் தனது தந்தையிடம் “அடிக்கடி நாகராஜ் அங்கிள்  வீட்டிற்கு வந்து அம்மாவுடன் நெருக்கமாக இருக்கிறார்” என்று கூறியுள்ளான். இதுகுறித்து மனைவியை கார்த்திகேயன் கேட்டுள்ளார். 

அப்போது உறவுகார நண்பர் ஒருவர் என்று பேசி சமாளித்துள்ளார். ஆனால் மனைவி மஞ்சுளா, நகராஜூடன் பழகி வருவதை தெரிந்து கொண்டார்.  இதற்கிடையே மஞ்சளா நாகராஜூடன் தனிமையில் இருந்த போது ஒரு நாள் கார்த்தியேன் பார்த்து இருவரையும் கையும் களவுமாக பிடித்து அடித்து உதைத்துள்ளார். அப்போது என்னை நாகராஜ் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று கணவரிடம் மஞ்சுளா கூறியுள்ளார்.

மனைவி சொல்வதை நம்பி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் நாகராஜ் மீது புகார் அளித்தார். அதன்படி போலீசார் நாகராஜை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நாகராஜ் தனது கள்ளக்காதல் விவகாரம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தான். 

இதனால் போலீசார் மஞ்சுளா மற்றும் புகார் அளித்த கார்த்திகேயனை அழைத்து பேசியுள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தை மறைத்து புகார் அளிப்பதா என்று போலீசார் கடிந்துள்ளனர். இதுகுறித்து வெளியில் தெரிந்தால் பெற்றோர் மனமுடைந்து விடுவார்கள் என்று கூறி கார்த்திகேயன் தனது புகாரை திரும்ப பெற்று கொண்டார்.  அதன்பிறகு போலீசார் நாகராஜை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். அதன்பிறகு நாகராஜ் தனது அறையை காலி செய்துவிட்டு ராமாபுரம் அன்னை சத்தியா நகரில் வசித்து வந்தார். கார்த்திகேயன் தனது மனைவி மஞ்சுளாவிடம் நீ திருமணம் ஆனவள் என்று தெரிந்து தான் எனது பெற்றோரை மீறி நான் உன்னை திருமணம் செய்து கொண்டேன். கள்ளத்தொடர்பு குறித்து எனது பெற்றோருக்கு தெரிந்தால் என்னால் உயிருடன் இருக்க முடியாது என்று கூறியுள்ளார். 

அதற்கு மஞ்சுளா இனி நான் நாகராஜூடன் பழக மாட்டேன் என்று கூறியுள்ளார். அதன்படி சில மாதம் மஞ்சுளா, நாகராஜூடன் பேசாமல் இருந்துள்ளார். ஆனால் நாகராஜ் தனது கள்ளக்காதலி மஞ்சுளாவை வேலை செய்யும் இடத்திற்கு  சென்று பார்த்து தனது நட்பை மீண்டும் தொடர்ந்துள்ளார். கணவனுக்கு தெரியாமல் மஞ்சுளா கள்ளக்காதலனுடன் போனில் பேசி வந்துள்ளார். இதுகுறித்து மகன் ரிதீஷ் சாய் தனது தந்தை கார்த்திகேயனிடம் கூறியுள்ளார்.  இதனால், ஆத்திரமடைந்த கார்த்திகேயன் எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் நாகராஜ் மீது புகார் அளித்தார். அதன்படி போலீசார் நாகராஜ் மீது ஐபிசி 341, 294(b), 384, 506(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 

புகார் அளிக்க மஞ்சுளாவும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.  இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் தனது கள்ளக்காதலை மறைக்க என்னை மாட்டி விட்டுள்ளார் என்று கூறி கள்ளக்காதலி மஞ்சுளா மற்றும் அவரது கணவர் கார்த்திகேயன் மீது ஆத்திரத்தில் இருந்த நாகராஜ் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் கள்ளக்காதலியின் மகன் ரிதீஷ் சாயை பழிவாங்க திட்டமிட்டுள்ளான்.  மஞ்சுளாவுடன் அடிக்கடி ரிதீஷ்சாய் டியூசன் சென்டருக்கு நாகராஜ் சென்று வந்ததால் ரிதீஷ் சாயை அழைத்து செல்லும் போது இந்தி ஆசிரியை பொம்மிக்கு சந்தேகம் வரவில்லை. பொய் புகார் மூலம் எனது வாழ்க்கையை அழித்துவிட்டதால் பழிவாங்கும் நோக்கில் ரிதீஷ்சாயை தனது பைக்கில் சேலையூர் இந்திராநகரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். சேலையூர் செல்லும் போது பைக் திடீரென பழுதானது. இதனால் நாகராஜ் பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு ஆட்டோவை பிடித்து இந்திரா நகரில் உள்ள அலுவலகத்திற்கு இரவு 8.30 மணிக்கு சென்றார். அங்கு அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியிடம் அலுவலகத்திற்கான சாவியை வாங்கி கொண்டு அலுவலகத்தை திறந்துள்ளார். 

இதற்கு முன்பு நாகராஜ், தனது அலுவலகத்திற்கு ரிதீஷ் சாயை அழைத்து வந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. உள்ளே அழைத்து சென்ற ஓய்வு அறையில் வைத்து ரிதீஷ்சாயை அடித்து வாயை பொத்தி பீர் பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் ரிதீஷ் சாய் மயங்கி விழுந்தான். உடனே நாகராஜ் அலுவலகத்தில் இருந்த திண்ணரை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிகளவில் திண்ணர் குடித்ததால் அவர் வாந்தி எடுத்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

நள்ளிரவு நாகராஜூக்கு மயங்கம் தெளிந்து எழுந்தார். அப்போது ரிதீஷ் சாய் உயிருடன் இருப்பது தெரியவந்தது. உடனே அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அவனது தலையில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர், அதிகாலை பெருங்களத்தூர் சென்று தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து காட்பாடி வந்த போது போலீசார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினார்.

மனைவிக்கு தெரியாமல் நடந்திருக்காது கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை கார்த்திகேயன் கூறுகையில், என் மகனை நன்றாக படிக்க வைத்து பெரிய அளவிற்கு கொண்டு வர ஆசைப்பட்டேன். ஆனால் அவனை கொடூரமாக கொலை செய்து விட்டனர். எனது மகனை நாகராஜ் அழைத்து சென்ற போதே நான் காவல்நிலையத்தில் புகார் அளிக்க முயன்றேன். ஆனால் எனது மனைவி மஞ்சுளா தடுத்துவிட்டார். 

நாகராஜ் ஒன்றும் செய்ய மாட்டான். மகன் வந்து விடுவான் என்று கூறினார். அதை நம்பினேன். தற்போது எனது மகன் என்னிடம் இல்லை. என் மகன் கொலைக்கு மனைவி மஞ்சுளா உடந்தையாக இருந்துள்ளார். சொத்தை அபகரிக்கும் நோக்கில் நாகராஜூடன் சேர்ந்து பெற்ற மகனையே கொலை செய்து விட்டார். எனவே மனைவி மஞ்சுளா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார். பேஸ்புக் பக்கத்தில் ரிதீஷ் சாயுடன் நாகராஜ் கிரிக்கெட் விளையாடும் போது ரிதீஷ்சாயுடன் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வைத்துள்ளார்.