* கூட்டணிக் கட்சி தலைவர் என்ற முறையில் பிரதமரை சந்தித்தேன். தேர்தலின்போது நாங்கள் விசுவாசமாக நடந்து கொண்டோம். கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கிறோம். எங்கள் நடவடிக்கைகளைப் பார்த்தார்கள், அதற்கான மரியாதையை தந்திருக்கிறார்கள். - ஜான் பாண்டியன்

* ஏற்கனவே சிலை கடத்தல் டி.ஜி.பி.யாக திலகவதி இருந்தபோது மீட்டு வந்த சிலைகளை, தான் மீட்டு வந்ததாக பொன்.மாணிக்கவேல் விளம்பப்படுத்திக் கொள்கிறார். சிலை மீட்புப் பிரிவின் பணியைச் செய்யாமல், அறநிலையத் துறையில் ஊழல் நடந்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை கைது செய்துள்ளார். சுருக்கமாக சொல்வதென்றால், கோயில்களை இந்து அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கு ஆதரவாக செயல்படுகிறார் பொன் மாணிக்கவேல். - வன்னி அரசு. 

*தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பே இல்லை. ஏன் என்றால் எல்லோர் மனதிலும் தோல்வி பயம் இருக்கிறது. இனி எந்தக்கட்சி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வருகிறதோ, அந்த கட்சிதான் இரண்டே மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும். இப்போது இந்த தேர்தல் நடத்த இருப்பதாக சொல்வது வெறும் கண் துடைப்பு. - எஸ்.வி.சேகர்.

*அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, உத்தவ் தாக்கரேதான் மஹாராஷ்டிராவின் முதல்வர். இதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை. அஜித் பவார், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதனால் மீண்டும் சரத்பவார் பக்கம் வந்துவிடுவார் என்று நம்புகிறோம். - சஞ்சய் ராவத் (சிவசேனா நிர்வாகி)

*விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மர்ம நபர்கள், என் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுகின்றனர். ஆபாசமான வார்த்தைகளில் திட்டுகின்றனர். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்கும், என் குடும்பத்தாருக்கும் போலீஸ் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். -காயத்ரி ரகுராம்

* சுறா மீனின் துடுப்புகள் மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் சீனாவில் சூப் வைத்து சாப்பிட பயன்படுகின்றன. இந்த சூப் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெருகும், வாழ்வில் வளம் கிடைக்கும் என அந்நாட்டு மக்களால் நம்பப்படுகிறது. அந்த வகையில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த எட்டு லட்சம் ரூபாய் மதிப்புடைய பதினான்கு கிலோ சுறா துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.- பத்திரிக்கை செய்தி

*நம்ப முடியாத பல சாகசங்களை கேனன் செய்துள்ளது. இது நாய்களின் ஹீரோ. மிகவும் சமர்த்து, மிக மிக புத்திசாலி. இதன் சாகசத்தை பாராட்டி, சான்றிதழும், பட்டயமும் வழங்கப்படும். அமெரிக்க ராணுவத்துக்கு கேனன் அதிகளவில் உதவியுள்ளது.- பாக்தாதியை கண்டுபிடித்த நாய் பற்றி, அமெரிக்க அதிபர் டிரம்ப்

* தமிழக காவல்துறையில் பதிவேடு உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும், தமிழில் இருக்க வேண்டும்! என டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. - சரத்குமார். 

* ஆண்கள் சின்ன வீடு வைத்துக் கொண்டால், எப்படியாவது உழைத்து சம்பாதித்து அந்த வீட்டுக்கு தேவையானதை செய்துவிடுவான். அதே நேரத்தில் பெரிய வீட்டையும் தொந்தரவு செய்ய மாட்டான். ஆனால் பெண்களோ கள்ளக் காதலுக்காக கணவர், குழந்தைகளை கொன்று விடுதாக செய்திகள் வருகின்றன.  பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல. பெண்களின் பலவீனத்தை ஆண்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். -கே.பாக்யராஜ்