தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்களின்போது ஆபாச நடனம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடன நிகழ்ச்சிகளை வீடியோ பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்களின்போது ரெக்கார்டு டான்ஸ், காபரே டான்ஸ் என ஆபாச நடனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பான புகார்கள் பொதுமக்கள் தரப்பில் கொடுக்கப்பட்டும் வந்தது. இந்த நிலையில், கோயில் திருவிழாக்களின்போது, ஆபாச நடனங்களை அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், கோயில் விழாக்களின்போது தொடர்ந்து ஆபாச நடனங்கள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளும் வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், தமிழக கோயில் திருவிழாக்களின்போது ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆபாச நடன நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவிழாக்களின்போது நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளை காவல் துறையினர் முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.