வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவில் நாகை அருகே கரையைக் கடந்தது. நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களை கஜா புயல் சின்னாபின்னமாக்கியது.

இதையடுத்து அந்த மாவட்டத்து மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழக அரசு மட்டுமல்லாமல் திமுக, அமமுக, இடது சாரிகள்,விடுதலைச் சிறுதைகள், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளும், ஏராளமான தொண்டு நிறுனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கின.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் விவசாயக் கடன், கல்விக்கடன் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதனிடையே நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு டீ கடை உரிமையாளர் வித்தியாசமாக செய்துள்ள ஒரு கடன் தள்ளுபடி அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. நாகை மாவட்ட கிராமம் ஒன்றில் தேனீர் கடை நடத்தி வரும் மெய்யநாதன் என்பவர், கஜா புயல் காரணமாக 18.12.2018 வரை அந்த கடையில் டீ அருந்திவிட்ட பணம் கொடுக்காமல் சென்றவர்களுக்கு அந்த கடன் தள்ளுபடி செயப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பொதுவாக கிரமங்களில் உள்ள ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்கள் அதிகாலையில் டீ குடித்துவிட்டு பெரும்பாலும் கடன் சொல்லிவிட்டுத்தான் செலவார்கள். தற்போது அந்த கடனை கடை உரிமையாள்ர் தள்ளுபடி செய்திருப்பது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

இதே போல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரசும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.