தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. வார நாட்களில் ஒரு கடையில் குறைந்தது சுமார் ரூ.1 லட்சம் வரை விற்பனை நடைபெற்று வருகிறது.மற்ற வார இறுதி நாட்களில் இந்த விற்பனை 30 சதவீதம் கூடுதலாக நடக்கிறது. 

விற்பனையாளர்கள் மது வாங்க வருவோரிடம் இருந்து  நிர்ணயிக்கப்பட்ட விலையை விடமதுபானங்களை கூடுதலாக ரூ.20 வரை வைத்து விற்பனை செய்வதாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. 

இதுதொடர்பாக, டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து மாவட்டமேலாளர்களுக்கும் அனுப்பியுள்ளசுற்றறிக்கையில் , டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மதுபானம் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் தலைமை அலுவலகத் துக்கு குறுஞ்செய்தி, தொலைப் பேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை தடுக்கும் பொருட்டு, மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிகழும் ஒவ்வொரு மதுபான விற்பனைக்கும் விற்பனை ரசீது கண்டிப்பாக வழங்க கடைப்பணியாளர்களை அறிவுறுத்த வேண்டும்.

இந்த விற்பனை ரசீதில் கடை எண், தேதி, மதுபானத்தின் பெயர்,அதன் அளவு, அதன் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். மேலும், கடைப்பணியாளர்கள் ரசீதின் மீது அவர்களின் கையொப்பமிட வேண்டும். 

அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் ஒவ்வொரு மாதமும் உட்தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. தணிக்கை யின்போது அனைத்து மதுபானங் களும் சரியாக இருப்பு சரிபார்க்கும் வகையில் மதுபானங்களை தணிக்கையாளர்கள் காண்பிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.