தமிழகம் முழுவதும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை எண் 5410 வழக்கம் போல் செயல்படுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை எண் 5410 வழக்கம் போல் செயல்படுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 வார்டுகளில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நகராட்சி பகுதிகளில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதிகளில் 7,621 வார்டுகளிலும் அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் தேர்தலையொட்டி கடந்த 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் சென்னை இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மதுபான கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா டாஸ்மாக் மதுபானக் கடை எண் 5410 இன்று வழக்கம் போல் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டது. அங்கு கூட்டம் கூட்டமாக குடிமகன்கள் குவிந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இது குறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயற்சித்தும் முடியவில்லை என கூறப்படுகிறது. அப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமகன்கள் கூடியதால் நிலையூர் டாஸ்மாக் கடை திருவிழா போல் காட்சியளிக்கிறது.
