தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை முறைப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிகளுக்கு வருகிறார்களா என்பதை கண்காணிக்க பயோமெட்ரிக் வருகை பதிவேட்டு முறையை பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. 

நிக் என்னும் மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய தொழில் நுட்பத்தை தமிழக அரசு நடைமுறைப் படுத்தியுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் இதுவரை 7728 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 

சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பயோமெட்ரிக் பதிவேட்டில் பதிவு செய்துள்ள நிலையில், மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் இதனை நடைமுறைப்படுத்தும் பணிமேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.