கடந்த  மார்ச் மாதத்தில் இருந்தே தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வந்தது. அதிலும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக, 15-க்கும மேற்பட்ட தமிழகத்தின் நகரங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது.

தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்மாவட்டங்கள், டெல்டா, கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. கோடைகாலம் தொடங்கி இன்னும் பாதி நாட்களைக் கடப்பதற்குள்ளாகவே மக்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என்பதால், கோடையை குளிர்விக்கவாவது, மழை வருமா என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், கன்னியாகுமரி, தேனி, நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை மாலை நேரங்களில் மழை பெய்துள்ளது.

இதனிடையே அடுத்துவரும் நாட்களில் தமிழகத்தின் மழை நிலவரம் குறித்த வெதர் மேன் பிரதீப் ஜான் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் வழக்கமாக மார்ச் 15-ம் தேதி கோடைகால மழை வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை சற்றுதாமதமாக மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. 

கடந்த இரு நாட்களாக கன்னியாகுமரி, நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வெப்பமும் கடுமையாக இருக்கும். அதேசமயம், மாலை நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். இதே சூழல் அடுத்த 10 நாட்கள் வரை இருக்கும்.

தமிழகத்தில் குறிப்பாக உள்மாவட்டங்களான சேலம், தருமபுரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை அடுத்த 10 நாட்களுக்கும் நாள்தோறும் இல்லாவிட்டால்கூட சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்..

அதேபோல, தெற்கு கடலோர மாவட்டங்களான வேதாரண்யம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களில் குறைந்தபட்சம் 2 நாட்களுக்காவது மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இந்த இடியுடன் கூடிய மழை பெரும்பாலும் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், தென்மாவட்டங்களில்தான் இருக்கும். கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.