தமிழகத்தில் இன்று முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இன்று முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்ததை அடுத்தும், ஒமைக்ரான் பரவல் காரணமாகவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த மாத தொடக்கத்தில் 30 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு, கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் வெகுவாக குறையத் தொடங்கியது. இதனால் கட்டுபாடுகளில் தளர்வுகள் அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு போன்ற கட்டுபாடுகள் கடந்த வாரம் விலக்கிக்கொள்ளப்பட்டன. இன்று முதல் பள்ளிகளும் திறக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திட மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமல் உள்ளன. அந்தவகையில் இன்று முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுக்குறித்த அறிவிப்பில் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும். மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை. அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை. உணவகங்கள், விடுதிகள். அடுமணைகள். தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும். துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிசபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை. அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும். அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தி 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து பொழுதுபோக்கு கேளிக்கைப் பூங்காக்கள் நீர் விளையாட்டுகளைத் தவிர்த்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.