திருப்பூர்
 
மக்களுக்கு என்ன தேவை என்பதை பார்த்து அதன்படி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று தமிழக அரசை, அமைச்சர் உடுமலை கே.இராதாகிருஷ்ணன் புகழ்ந்துள்ளார்.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக 542 புதிய பேருந்துகள் சென்னையில் நடைபெற்ற விழாவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார். 

இதில் திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டும் மொத்தம் 44 பேருந்துகள் ஒதுக்கப்பட்டன. இதன்படி திருப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட திருப்பூர் ஒன்றாவது கிளைக்கு 4 பேருந்துகள், இரண்டாவது கிளைக்கு 6 பேருந்துகள், பல்லடம் கிளைக்கு 4 பேருந்துகள், 

காங்கேயம் கிளைக்கு 3 பேருந்துகள், தாராபுரம் கிளைக்கு 4 பேருந்துகள், உடுமலை கிளைக்கு 2 பேருந்துகள், பழனி ஒன்றாவது கிளைக்கு 6 பேருந்துகள், இரண்டாவது கிளைக்கு 4 பேருந்துகள் என மொத்தம் 33 பேருந்துகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த பேருந்துகள் அனைத்தும் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் மீதமுள்ள 11 பேருந்துகளை புறநகர் பகுதிகளுக்கு இயக்குவதற்கான தொடக்க விழா திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று காலை நடந்தது. 

இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். அமைச்சர் உடுமலை கே.இராதாகிருஷ்ணன் பங்கேற்று பச்சை கொடியசைத்து புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "மக்கள் நலனுக்காக தமிழக அரசு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு என்ன தேவை என்பதை பார்த்து அதன்படி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 

அந்த வகையில் போக்குவரத்து துறை சார்பாக இதுவரை இல்லாத அளவிற்கு குளிர்சாதன, படுக்கை வசதிகளுடன் கூடிய பஸ்களும் தற்போது இயக்கத்திற்கு விடப்பட்டுள்ளன.

பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொடுத்துள்ள அரசுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். போக்குவரத்துதுறையை பொறுத்தவரை மக்களின் நலனே முக்கியம். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பேருந்துகளில் இருக்கைகள் குறைவான எண்ணிக்கையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது" என்று அவர் கூறினார்.