விரைவில் மாற்றம்? தயாராகும் தமிழக காங்கிரஸ்..!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் புதிய மேலிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. கட்சியை அடிமட்ட அளவிலும், மேல்மட்ட அளவிலும் பலப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை அண்மையில் காங்கிரஸ் மேலிடம் நியமித்தது. இந்த ஐந்து மாநிலங்களுக்கும் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த தேர்தல்கள் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படுவதால், அவை கவனம் ஈர்த்துள்ளன.
அதன்படி, கடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க உதவியதில் பெரும் பங்காற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவை கலக்கிய சசிகாந்த் செந்தில்: அடுத்த டார்கெட் ராஜஸ்தான்!
அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சிறிவெல்ல பிரசாத் தெலங்கானா மாநில தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களாக கர்நாடகாவை சேர்ந்த தினேஷ் குண்டுராவ், ஆந்திராவை சேர்ந்த சிறிவெல்ல பிரசாத் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இதில், சிறிவெல்ல பிரசாத் தெலங்கானாவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், தினேஷ் குண்டுராவ், கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். அவரால், தமிழ்நாடு பொறுப்பாளராக முழு நேரமாக செயல்படுவது கடினம்.
எனவே, இந்த இரண்டு தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பதவிகளுக்கு வேறு சிலரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. அதன்படி, கேரளாவை சேர்ந்த மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா, நெய்யாட்டின்கரா சனல் ஆகிய இருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.