தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 2 நாட்களில் 20 பேர் பலியாகியுள்ளனர். இதனால், பொது மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது. இதேபோல், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஏராளமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதால், பலர் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகம் முழுதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல், மர்ம காய்ச்சலால், பொதுமக்கள் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கூட்டம் அலைமோதுகிறது.

கோவை வெரைட்டி ஹால் ரோடு வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் அமுதன் (5). இச்சிறுவனுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடத்து அவனை, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி அமுதன் நேற்று முன்தினம் இறந்தான்.

இதேபோல், திருப்பூர் மாவட்டம் தாசப்பா நகரை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி வசந்தா (63), பன்றிக்காய்ச்சலுக்கு கோவை அரசு மருத்துவமனையில்  நேற்று முன்தினம் இறந்தார்.


 
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பிரபாகரன் மனைவி சுமித்ரா(35). இவர், மர்ம காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தார்.

திருப்பூரில்: திருப்பூர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்தவர் நல்லான் மகன் அய்யாவு(32). இவர், கடந்த 15 நாட்களுக்கு மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ பரிசோதனையில் அய்யாவு பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. நேற்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியில் அய்யாவு இறந்தார். இதேபோல திருப்பூர் மாவட்டம் மங்கலம் அடுத்த கணபதி பாளையத்தை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் கணேசன் (57) கோவை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பன்றி காய்ச்சலுக்கு இரவு இறந்தார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் பொன்னாழிபாளையம் கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி ஆனந்த் மனைவி சந்தியா (20). கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. 7 மாத கர்ப்பிணியாக இருந்த சந்தியா மர்ம காய்ச்சலுக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கும் சிகிச்சை பலன் அளிக்காததால் கேரள மாநிலம் கொல்லங்கோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச்சென்று ஆயுர்வேத சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி  சந்தியா நேற்று இறந்தார். 


கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 நாளில் மர்மக்காய்ச்சலுக்கு9 பேர் பலியாகியுள்ளனர். இது தவிர பன்றிக்காய்ச்சலுக்கு 5 பேர், டெங்குவுக்கு 4 பேர் கடந்த 10 நாளில் பலியானது குறிப்பிடத்தக்கது. சேலம்: சேலம் அய்யந்திருமாளிகையை சேர்ந்த 4வயது குழந்தை சாந்த் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தான்.ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கானம்பட்டியை சேர்ந்த கர்ப்பிணி ராமாயி (24) நேற்று காலை காய்ச்சலுக்கு பலியானார்.


மருத்துவமனைக்கு நோட்டீஸ்: நாமக்கல்  கணேசபுரம் சிவஞானம் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ்(77). டைப்பிங்  இன்ஸ்டிடியூட் நடத்தி வந்தார். தனியார் மருத்துவமனையில் இவருக்கு  பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம்  அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் 3 நாட்களுக்கு முன் ராமதாஸ் இறந்தார்.  இவருக்கு பன்றி காய்ச்சல் பாதித்தது குறித்து தெரிவிக்காத தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்  ரமேஷ்குமார், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 மதுரை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 7 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர். இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த விருதுநகர் மாவட்டம், நரிக்குடியை சேர்ந்த சித்ரா(52), திருத்தங்கல்லை சேர்ந்த முத்துச்செல்வி(32) ஆகியோர் நேற்று முன்தினம் அடுத்தடுத்து பலியாயினர். 


நெல்லை குலவணிகர்புரத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை மந்திரமூர்த்தி, முன்னீர்பள்ளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (55), பாளை சமாதானபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம் (24), பாப்பாக்குடி அருகே புதுக்கிராமத்தை சேர்ந்த கோமதி (65) ஆகியோரும் அடுத்தடுத்து காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த செங்கல் பகுதியை சேர்ந்த கருப்பையா(40), புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விராச்சிமலையை சேர்ந்த மங்கையர்க்கரசி (62), தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மளிகை கடைக்காரர் நசுருதீன் (53) ஆகியோரும் பன்றிக்காய்ச்சல், மர்ம காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். இப்படி கடந்த 2 நாட்களில் மட்டும் 20 பேர் பலியாகி உள்ளதோடு, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு ஏராளமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.