சுஜித்தை மீட்க அவன் சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றின் அருகே நிலத்தை துளையிடும் அதிநவீன 'ரிக்' இயந்திரத்தை கொண்டு குழி தோண்டப்பட்டது. கடின பாறைகள் இருந்ததால் தோண்டும் பணி தாமதமாகியது. இதுவரை 57 அடி வரை குழி தோண்டப்பட்ட நிலையில், 60 அடிக்கு மேல் மண் இருப்பதாக கூறப்படுகிறது.

ரிக் இயந்திரம் மூலம் இரவு 9 மணி வரையில் 57 அடி குழி தோண்டப்பட்டது. பின், மண்ணின் தரம் மற்றும் பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக தீயணைப்பு வீரர் திலீப்குமார், முதுகில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஏணி மூலம் குழிக்குள் இறங்கினார். ஆய்வு செய்த பின் மேலே வந்தார்.

மீட்பு பணி நடைபெறும் இடத்தில் அவ்வபோது மழை பெய்வதால் தொய்வு ஏற்படுகிறது. பல இடையூறுகள் இருந்த போதிலும் மீட்பு பணி தொடர்கிறது.

குழந்தை சுவாசிப்பதற்கு ஏற்றார் போல், தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.. குழந்தை பயப்படாமல் இருக்க, குழிக்குள் விளக்கும், கண்காணிப்பதற்கு கேமராவும் பொருத்தப்பட்டது. ஒவ்வொரு முயற்சியின் போதும் தோல்வியுற்று, குழந்தை சில அடிகள் கீழிறங்கியதால் 20 அடியில் சிக்கிய குழந்தை 82 அடிக்கும் கீழ் சென்றான். தற்போதைய நிலையில், குழந்தை மயக்கமடைந்து அசைவற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குழிக்குள் இறங்கிய வீரர் எந்தவித காயமும் இல்லாமல் பத்திரமாக வெளியே வந்தார். இதையடுத்து 90 அடிகள் வரை துளையிட்டு அதன் பிறகு தீயணைப்பு வீரர்கள் துளைக்குள் இறங்க உள்ளனர்.

நாளை அதிகாலை அல்லது பிற்பகலுக்குள் சுஜித் மீட்கப்படுவான் என எதிர்பார்க்கடுகிறது.