தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க பசுமை தீர்ப்பானையம்
நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசாணையை ரத்து செய்ய தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்தது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தின் 100-வது நாளின்போது, போலீசாருக்கும் பொதுமக்களும் கடும் மோதல் எழுந்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மே 28 ஆம் தேதி அன்று ஸ்டெர்லை ஆலை மூட தமிழக அரசு அரசாணை விதித்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
அதற்கு முன்பாகவே ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட குடிநீர், மின்சாரம் ஆகையவை துண்டிக்கப்பட்டது. முடிவில் ஆலைக்கு தமிழக அரசால் சீல்
வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வேதாந்தா நிர்வாகம், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில்,
சுற்றுச்சூழல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதாகவும், ஆலைக் கழிவுகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மனுடிவல் கூறப்பட்டிருந்தது. 

அந்த மனு மீதான விசாரணை இன்று பசுமை தீர்ப்பாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது வேதாந்தா நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், தமிழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து, பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை மீண்டும், வரும் 18 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசாணையை ரத்து செய்ய தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்தது.

இது குறித்து வேதாந்தா நிர்வாகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அரிமா சுந்தரம், செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக அரசு உள்நோக்கமாக
நடவடிக்கை எடுத்து அரசாணை பிறப்பித்துள்ளது. அதற்கு முன்பாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே தமிழக அரசின்
அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து ஆலை இயங்க வேண்டும். ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பில்லை. சுற்றுச்சூழல் பற்றிய அனைத்து
அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான் ஆலை செயல்பட்டு வருகிறது என்றார்.