அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் மக்களுக்குக் கிடைப்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் மக்களுக்குக் கிடைப்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் திருநாளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது. ஆனால், அப்படி வழங்கப்படும் பொங்கல் பரிசுகள் தரமற்ற முறையிலும், எடை குறைவாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தரமான பொங்கல் பரிசுகளை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனா பெருந்தொற்றாலும் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பொங்கல் திருநாளை உவகையுடன் கொண்டாடும் வகையில், கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் அரசுக்குப் பெரும் நிதி நெருக்கடி நிலவி வரும் இச்சூழலிலும் மக்களின் நலன்கருதி 1,297 கோடி ரூபாய் செலவில் இத்தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை நானே நேரடியாகச் சென்று நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்தேன் என்றும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தைப் பற்றிச் சிலர் தவறான விஷமதனமான கருத்துகளைப் பரப்பி வருகின்றதாகவும் கூறியுள்ளார். எனவே, இந்தப் பணிகள் முறையாக நடைபெற்று வருவதையும், தரமான பொருட்கள் எவ்வித புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணிகளை, அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.