திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம்‌ டானா காளிபார்விளையை சேர்ந்தவர் பழனிக்குமார் எம்.காம். பட்டதாரியான இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். பழனிகுமாரின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் அவர் தனது  தாயார் சாராதாவும் வசித்து வந்தார்.

இந்நிலையயில் கடந்த 2-ந் தேதி, மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பழனிக்குமாரை நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால்  சிகிச்சை பலனின்றி பழனிக்குமார் மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து பழனிக்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது தாயார் சாரதா சம்மதம் தெரிவித்தார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிக்கு இதயத்தையும், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு மற்றொரு சிறுநீரகமும், திருச்சி தனியார் ஆஸ்பத்திரி நோயாளிக்கு கல்லீரலும் தானமாக வழங்கப்பட்டது.

தாயார் சாரதாவுக்கு பழனிகுமார் மட்டுமே வாழ்வாதாரமாக இருந்து வந்துள்ளார். தற்போது பழனிக்குமாரும் அரணமடைந்துவிட்டதால் தனக்கு தமிழக அரசு முதியோர் பென்சன் வழங்கவேண்டும் என்று சாரதா நெல்லை மாவட்ட ஆட்சியர்  ஷில்பா பிரபாகரிடம்  மனு கொடுத்தார்.

அவரது மனுவை பரிசீலித்த கலெக்டர் உடனடியாக சாரதாவுக்கு முதியோர் பென்சனை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து சாரதாவின் வீட்டுக்கு நேரில் சென்ற ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ,  சாரதாவை சந்தித்து ஆறுதல் கூறினார். தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த சாராதாவை அவர் பாராட்டினார்.

இதைத் தொடர்ந்து அரசின் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை சாரதாவிடம் கலெக்டர் நேரடியாக வழங்கினார்.