கறுப்பு நிறத்துக்கு நியாயம் செய்த அழகன்! தமிழை தரணியெங்கும் கொண்டு சென்ற கவிஞன்! அறிவியலையும், கற்பனையையும் சேர்த்து சமைத்து பாடல் படைத்த பாடலாசிரியன்! பாமர தமிழனுக்கும் சங்க தமிழை ஜனரஞ்சகப்படுத்திய ஆசிரியன்! பத்ம மற்றும் தேசிய விருதுகளை வாங்கிக் குவித்த ஆளுமை அவன்!...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் வைரமுத்துவை பற்றி. 

தமிழை தலை நிமிர வைத்த வைரமுத்துவின் கர்வ கோபுர கலசத்தை சுற்றிச் சுற்றி இப்போது சர்ச்சை இடிகள். பாட்டில் பிழை! பணமே குறி! கற்பனை வற்றிவிட்டது! விலைக்கு வாங்கிய விருதுகள்!...எனும் குற்றச்சாட்டுக்கள் என்றாலும் கூட குறைபட்டு விட்டு நகர்ந்துவிடலாம். ஆனால் இது எல்லாவற்றையும் தாண்டியது. ஆம் பாலியல் அத்துமீறல் செய்தார்! என்று பேரரசு மீது பெரிய புகார்கள். 

ஜீரணிக்கவும் முடியவில்லை, ச்சீ! என்று விலகிச் செல்லவும் முடியவில்லை. தென் கொரிய நடிகைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் என்றாலும் கூட அறிக்கை விட்டு அதகளம் செய்யும் கட்சிகளும், சினிமா ஆளுமைகளும் ஏனோ வாய் மூடி நிற்கின்றனர். பாதி எழுதித் தீர்க்கப்பட்ட பென்சில் போல் மெலிதாய் வளர்ந்து முடிந்துவிட்ட சிறு சின்மயி மட்டும் சீறிக் கொண்டேயிருக்கிறார். 

இது இணையம் ஆட்சி செய்யும் காலமாச்சே? என்னதான் ஆச்சு வைரமுத்துவுக்கு? என்று கூகுள் பக்கம் தலைசாய்த்து, தேடுதல் இயந்திரம் சென்று ‘வைரமுத்து விக்கிபீடியா’ என்று தேடினால் விரியும் தகவல்க பெட்டி முகத்தில் அறைகிறது அதிர்ச்சியாய். ஆம்! அதில் வைரமுத்துவின் போட்டோவுக்கு கீழே Native Name:செக்ஸ்டார்ச்சர் வைரமுத்து’ என்று இருக்கிறது. 

இது மட்டுமல்ல, விக்கிபீடியாவின் சப்டைட்டில் விஷயங்களிலும் ‘Controversy’ என்று தனி காலமே கொண்டு வந்து, அவர் மீதான தற்போதைய விமர்சனங்களை டீல் செய்திருக்கிறார்கள். இது யார் செய்த வேலையோ? எப்படி இதற்கெல்லாம் அனுமதி கிடைத்ததோ! என்னா ஸ்பீடு!