கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? சீமான் கேள்வி

கள்ளச்சாராய படுகொலைக்கு அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சாயளர்களுக்கு என்ன தண்டனை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

Seeman asked what was the punishment for the rulers when many people died after drinking illicit liquor in Kallakurichi vel

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் ‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஐயும் தாண்டி தொடர்ந்து அதிகரித்துவருவது ஆற்றமுடியாத மனத்துயரத்தையும், கவலையையும் அளிக்கிறது. தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகள், பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோர்கள், கணவரை இழந்து தவிக்கும் மனைவிகள் என வாசலில் இறந்த உடல்களை வைத்து அடுத்தடுத்த வீடுகளில் கேட்கும் மரண ஓலங்கள் நெஞ்சைப் பிளக்கின்றது. குடும்பப் பாரத்தைச் சுமக்க நேர்ந்துள்ள பெண்களின் அழுகுரல்கள் இதயத்தை நொறுங்கச் செய்கின்றன. கள்ளச்சாராயத்தைத் தடுக்கத்தவறி திமுக அரசு வட மாவட்டங்களைச் சுடுகாடாக மாற்றியுள்ளது.

‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் அளவிற்கு மிகமோசமான சூழல் நிலவும் நிலையில், உயிரிழப்புகளுக்குக் கள்ளச்சாராயம் காரணம் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தது எப்படி? திமுக அரசு சிறிதும் மனச்சான்று இன்றி, வெவ்வேறு உடல் உபாதைகளாலேயே உயிரிழப்புகள் நிகழ்ந்தது என்றுகூறி, கள்ளச்சாராய மரணங்களை மூடி மறைக்க முயன்றது வெட்கக்கேடானது. கள்ளச்சாராயம் அருந்தி இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ள கொடுமைகளும் அரங்கேறியுள்ள நிலையில் அதிகாரிகளுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ கள்ளச்சாராயம் விற்பனை குறித்த குறைந்தபட்ச அறிதல் கூட இல்லை என்பது திமுக ஆட்சியில் அரசு இயந்திரம் எந்த அளவிற்கு மோசமாக இயங்குகிறது என்பதைக் காட்டுகிறது. 

ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழகக் காவல்துறையை இரையாக்கும் போக்கை இனியாவது கைவிடுங்கள்; முதல்வருக்கு அண்ணாமலை அறிவுரை

கள்ளச்சாராய விற்பனையின் முக்கியக் குற்றவாளியான சின்னதுரை மீது இதுவரை 70க்கும் மேல் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்க அவர் அனுமதிக்கப்பட்டது எப்படி? அப்பகுதியில் காவல்துறையால் நேற்று ஒரே நாளில் மட்டும் 1000 லிட்டர் அளவிற்கு கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்ட நிலையில், இத்தனை நாட்கள் தமிழ்நாடு காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது? தொழிற்போட்டி காரணமாக கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், போட்டி போட்டு விற்கப்படும் அளவிற்கு கள்ளச்சாராயப் புழக்கம் அதிகரித்தது எப்படி? அதனை அனுமதித்தது யார்? காவல்துறையின் அனுமதியுடன்தான் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகப் பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டிற்கு திமுக அரசின் பதில் என்ன? 

கள்ளச்சாராய விற்பனையில் திமுகவினரின் ஆதிக்கம் காரணமாகவே காவல்துறையினரால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதும், பொதுமக்கள் அதுகுறித்து புகார் தெரிவிக்கவே அச்சப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் கடும் கண்டனத்துக்குரியதாகும். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து தண்டித்துள்ள திமுக அரசு, அவர்களை நிர்வகிக்கும் முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை அளிக்க உள்ளது? கள்ளச்சாராயத்தால்  நடைபெற்றுள்ளது விபத்தோ, தற்செயலான உயிரிழப்புகளோ அல்ல; அரசின் அலட்சியத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள பச்சைப் படுகொலைகள்! அதற்கு அதிகாரிகளை மட்டும் பலியாடாக்கி ஆட்சியாளர்கள் தப்பிக்க முயல்வது பெருங்கொடுமையாகும்.

மரக்காணத்தில் கடலில் கரை ஒதுங்கிய 2 சிறுமிகளின் உடல்கள்; குடும்ப பிரச்சினையால் குழந்தைகள் கொலை? 

எத்தனை இலட்சங்கள் துயர்துடைப்புத்தொகையாகக் கொடுத்தாலும், அவற்றின் மூலம் இழந்த ஒரே ஒரு உயிரையாவது திமுக அரசால் திருப்பிக்கொடுக்க முடியுமா? கடந்தகால கள்ளச்சாராய மரணங்களிலிருந்து திமுக அரசு படிப்பினைப் பெற்று, கடும் நடவடிக்கைகள் எடுத்திருந்தால் தற்போது மேலும் பல உயிர்கள் பலியாவதைத் தடுத்திருக்க முடியும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையால் கண்டறிந்து தடுக்க முடியாத கள்ளச்சாராய விற்பனையையும், மரணங்களையும் அதே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குற்றப்புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) மூலம் விசாரித்து தடுக்க முடியும் என்பது வேடிக்கையானதாகும். கடந்த ஆண்டு விழுப்புரம் எக்கியார்குப்பத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரிக்க திமுக அரசு நியமித்த சிபிசிஐடி விசாரணை என்னானது? அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அதன் பிறகும் தற்போது மீண்டும் கள்ளச்சாராயத்தால் இத்தனை உயிர்கள் பலியாகிறது என்றால் சிபிசிஐடி விசாரணை என்பதே மக்களின் மனக்கொந்தளிப்பை அடக்க மேற்கொள்ளப்படும் ஒரு கண் துடைப்பு நாடகம் என்பது தெளிவாகிறது.

ஆகவே, காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்வதில் காட்டும் அக்கறையையும், அவசரத்தையும் சிறிதளவாவது கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில் காட்ட வேண்டுமென்றும், இனியும் இதுபோன்று மதுவினால் மனித உயிர்கள் மலினமாகப் பறிபோவதைத் தடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios