சினிமா காட்சியை போல், பள்ளி ஆசிரியையை, மர்மநபர்கள் காரில் கடத்தி சென்றனர். இச்சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கும்பகோணம் அருகே பிரம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காயத்திரி (29). கும்பகோணம் மகாமகக் குளம் அருகே தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.

நேற்று மாலை காயத்திரி, வேலை முடிந்து தனது மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, பள்ளி அருகே ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், காயத்திரியை வழிமறித்து அவரது மொபட்டை உதைத்து கீழே தள்ளினர். பின்னர் அவரை, வலுக்கட்டாயமாக் காரில் ஏற்றி கொண்டு வேகமாக சென்றனர். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, ஆசிரியை காயத்ரியின் தந்தை கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ  இடத்துக்கு சென்று காயத்திரியின் மொபட்டை கைப்பற்றி, அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில், கடந்த மாதம் 1ம் தேதி கும்பகோணத்தில் உள்ள கிரைஸ்ட் த கிங் பள்ளியில் பணியாற்றிய வசந்தப்பிரியா என்ற ஆசிரியையை, அவரது உறவினரான திட்டக்குடியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் பைக்கி அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இச்சம்பவம் நடந்து 30வது நாளில், மேலும் ஒரு ஆசிரியை காரில் கடத்தப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதி மக்கள் மற்றும் ஆசிரியைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த கடத்தல் சம்பவத்துக்கு காதல் பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார்  தீவிரமாக விசாரிக்கின்றனர்.