தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதைத் தொடர்ந்து, பெருநகரங்களில் வசித்தவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். மேலும் பலர் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலின் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உள்ளது. பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி உள்ளது. இன்று மட்டும் தமிகத்தில் 11 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என தமிழக ஆசிரியர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தது. எனவே பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆகலாம் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் நிலவியது.

இந்நிலையில், தமிழகத்தில் ஜுன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது. 

ஏனெனில் வழக்கமாக தமிழகத்தில் ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கும். அதன்படியே அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.