தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் ஆல் பாஸ் செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டன. கடந்த 29ந் தேதி 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. நாட்டில் நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை திடீரென 13,154 ஆக உயர்ந்தது. நேற்று 16,764 ஆக பதிவாகி இருந்தது.நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் தொற்று உயர்ந்து உள்ளது.

இதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 22,775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்கிரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஒமைக்கிரான் வைரஸ் அச்சம் காரணமாக வரும் 10 -ம் தேதி வரை, 1 -ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் 9 -ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆல் பாஸ் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.