நேற்று முன்தினம் இரவு சேலத்தில் பெய்த கனமழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டு அதில் அடித்துச்  செல்லப்பட்ட மாணவன் முகமது ஆஷாத் இன்று காலை பிணமாக மீட்பட்டார். இதையடுத்து சேலம் சோகத்தில் மூழ்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் ரோகிணி நேரில் சென்று அந்த குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு 9.20 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கனமழையின் போது பயங்கர காற்று வீசியதால் சில இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.சேலம் களரம்பட்டி, பச்சப்பட்டி, நாராயண நகர், அஸ்தம்பட்டி, சங்கர் நகர், பெரமனூர், சன்னியாசி குண்டு, அண்ணா நகர், பொன்னம்மாபேட்டை புதுத்தெரு, சூரமங்கலம் சுப்பிரமணிய நகர், அம்மாபேட்டை என மாநகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

.இந்நிலையில் சேலம் நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முகமது ஆஷாத்  நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 3 பேருடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பினான். வீடு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ஓடையில் மாணவன் தவறி விழுந்தான். அவனை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவனை காப்பாற்ற முடியவில்லை. முகமது ஆஷாத் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் அங்கு விரைந்து சென்று அந்த ஓடை பகுதியில் தேடி பார்த்தனர். சம்பவ இடத்துக்கு கிச்சிபாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனே சென்று மாணவனை தேடினர். நேற்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை கருவாட்டுப் பாலம் அருகே துப்புரவுத் தொழிலாளர்கள் ஓடைக்குள் இறங்கி குப்பைகளை அகற்றும்போது, அங்கு மாணவன் முகமது ஆஷாத் சடலமாக கிடந்தார். இதைப் பார்த்த மாணவனின் பெற்றோரும்இ உறவினர்களுடம் கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி மாணவன் முகமது ஆஷாத் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். சேலத்தில் பெய்த திடீர் மழையால் மாணவன்  ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.