தஞ்சாவூர்
 
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 3-வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகங்கள் வெறிச்சோடின. பணிகள் முடங்கின.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது.

இப்போராட்டத்தில், "ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 

கணினி உதவியாளர்கள் மற்றும் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

கணினி உதவியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி இளநிலை உதவியாளராக பணி அமர்த்த வேண்டும்.

முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 

சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமின்றி ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 

5 ஆண்டுகள் பணி முடித்த பதிவுறு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு ஆட்சியரே பதவி உயர்வு வழங்க வேண்டும்" உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர்களும், 589 ஊராட்சிகளில் பணி புரியும் ஊராட்சி செயலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். 

இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பல்வேறு பணிகள் முடங்கின.