சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில், மெட்ரோ இரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் மெட்ரோ ரெயில், கூட்ட நெரிசலின்றி, சகல வசதிகளுடன் பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. மேலும் பேருந்து, இருசக்கர வாகனங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு செல்லும் நேரமும் குறைவாக உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்படும் பயணங்கள் இதன் மூலம் எளிதாக்கப்படுகிறது. இதனால் சென்னையில் அலுவலகம் செல்பவர்களின் பெரும்பாலானோரின் முதல் சாய்ஸாக மெட்ரோ இரயில் உள்ளது.
அதன்படி, திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் மெட்ரோ இரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பல புதிய வசதிகளை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, எழும்பூர், சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ளூர் மற்றும் புறநகர்பகுதிகளுக்கு செல்லும் இரயில்களின் பயணச்சீட்டை பெறும் வசதி செய்யப்பட்டு வருகிறது.மேலும் மெட்டோ நிலையங்களில் தென்னக ரயில்வே பயணச்சீட்டை பெறும் வசதி கூடிய விரைவில் அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில், இன்று மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 54.41 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் சுமார் 10.50 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஆதரவு அளித்து வரும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய திட்டங்களை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. பயணிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலானபரிசு கூப்பன்களை வழங்கவுள்ளது.
இந்த புதிய திட்டங்கள் வரும் 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும். இதுதவிர மேலும் 30 நாட்களுக்கான விருப்பம் போல் பயணம் செய்வதற்கான பயண அட்டை (ரூ.2,500 மற்றும் ரூ.50 வைப்புத்தொகை மதிப்பு) வழங்கப்படும்.மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500 மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளைத் தேர்ந்தெடுத்து மாதாந்திர அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தப்படும். அதில்10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை வாங்கிய 10 பயணிகளை தேர்ந்தெடுத்து மாதாந்திர அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தப்படும். இதில், குறைந்தபட்ச தொகையான ரூ.500-க்கு டாப் அப் செய்திருந்தால் ரூ.1450 மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும். பயணிகளை ஊக்குவிக்கவும் இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரிசுவிவரங்கள் குறித்து மேலும் தகவல்களை பெற அனைத்து மெட்ரோரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
